Sunday, December 27, 2009

வாயப்பன்

வாயப்பனின் சொந்த பெயர் ஐயப்பன். அவனுக்கு கட்டை நாக்கு. அவனிடம் பெயர் கேட்டால் வாயப்பன் என்றுதான் சொல்வான். அவன் அப்பா நெட்ட நடராஜன், ஆறடிக்கு மேல் உயரம். செட்டித்தெரு பிள்ளையார் கோவிலில் பாத்திரம் தேய்ப்பார்.
  பிள்ளையார் கோவில் 500 குடும்பங்கள் கொண்ட ‘ஏழூர் செட்டியார்களின்” குடும்ப 2312581231_0e252d034bகோவில். வந்தாரை வாழ வைக்குமிடம். எல்லோருக்கும் வேலை உண்டு. சம்பளம் ஆறு மாதத்துக்கு ஒருமுறை நாலு கோட்டை நெல். தினமும் இரண்டு சோத்துக்கட்டி. குழம்பு அவ்வளவுதான். பல குடும்பங்கள் அந்த கோவிலை நம்பிதான் இருந்தது. கோவிலில் வேலை பார்ப்பவரெல்லாம், ஒரு வகையில் செட்டித்தெரு வீட்டுக்காரர்களின் வேலைக்காரர்கள் போல்தான்.

வாயப்பனும் அவன் அப்பாவுக்கு உதவ வந்து, கோவிலிலேயே நிரந்தரம் ஆகிவிட்டான். கோவில் காலையில் ஐந்து மணிக்கு நடை திறந்து, ஒன்பது மணிக்கு அடைப்பார்கள். பிறகு மாலை ஆறு மணியிலிந்து ஒன்பது மணி வரை. இடைப்பட்ட பகல் முழுவதும், வாயப்பன் வீட்டுவேலைகள்தான் செய்து கொண்டிருப்பான். கூலி எதுவும் கொடுக்க மாட்டார்கள். இவனும் கேட்கமாட்டான்.

 

 

 

 

 

 

எனக்கு பத்து வயது இருக்கும்போது அவனுக்கு, முப்பதாவது இருக்கும். யாரும் அவன் வயசுக்கு மரியாதை கொடுப்பதில்லை. “லே வாயப்பா, இங்க வால” என்றுதான் அழைப்போம். அவனும் மனம் கோணாமல் வருவான்.

எப்பவாவது, கிருஷ்ணா டாக்கீஸில், எம்.ஜி.ஆர் படம் பார்த்து விட்டு வந்து கதை சொல்வான். என்னையொத்த சிறுவர்கள் அவனிடம் கதை கேட்பதில் அலாதிப் ப்ரியம். எங்களுக்கு போரடித்தால், அவனிடம் “எப்பல உன் கல்யாணம்” என்போம். இந்த கேள்விக்கு மட்டும் அவனுக்கு கோபம் வரும். “போங்கல” என்று கையை ஓங்குவான். அடிக்க மாட்டான். அடிக்க மாட்டானென்று தெரிந்தாலும், நாங்கள் பயந்தவர்கள் போல் சிதறி ஓடுவோம்.

செட்டித்தெருவில் யார் வீட்டிலாவது கல்யாணம் என்றால் வாயப்பன் ரொம்ப பிசியாகிவிடுவான். லோட் ஆட்டோ பிடித்து சமையல் பாத்திரம் இறக்குவான். வாழை மரம் கட்டுவான். பந்தியில் அவியல் விளம்புவான். அவியல் வாளி ரொம்ப கனமானது. தூக்க சிரமம், அதனால் அதை அவனிடம் தள்ளி விடுவார்கள்.

கடைசியில், இவனிடம் மோர் வாளி கொடுத்து அனுப்பி விட்டு, விளம்புகிறவர்களெல்லாம், இவனையே பார்த்து கொண்டிருப்பார்கள்.
வாயப்பன் பந்தியில் இறங்கி ஆரம்பிப்பான்.
“அண்ணே மோளு , அக்கா மோளு , கப்புல மோளு “
கொல்லென்று பந்தி முழுவதும் சிரிப்பொலி பரவும். பெண்கள் தலையை குனிந்து கொண்டு சிரிப்பார்கள்.

“ஏய் யார்லது இவன் கைல மோர கொடுத்தனுப்பசது” என்று டிரஸ்டி தேசியப்பன் சத்தம் போடுவார். ஆனால் ஒவ்வொரு பந்தியிலும் இது தொடரும். நாங்கள் ஒவ்வொரு முறையும், இதை முதல் தடவை கேட்பதுபோல் விழுந்து விழுந்து சிரிப்போம்.

காலம் ஓடிவிட்டது, ஊருக்கு போகும் போது கோவிலில் வாயப்பனை பார்ப்பேன். இனிமேல் எப்ப கல்யாணம் என்று கேட்கும் வயசை கடந்து விட்டான் வாயப்பன்.  “எப்படி இருக்க வாயப்பா” என்பேன். அதற்கு பதில் சொல்லாமல், “எப்ப வந்த” என்று தொடங்கி, ஏதோ பேசுவான். ஒன்றும் புரியாது. தலையை ஆட்டி விட்டு நகர்ந்து விடுவேன்.
கோவில் முடிந்ததும், கோவில் முகப்பிலேயே தனியாக உட்காந்திருப்பான். இப்ப அவனை யாரும் வீட்டு வேலை செய்ய கூப்பிடுவதில்லை. அவனை சுற்றி கதை கேட்கும் சிறுவர் கூட்டமும் இல்லை. அவனுக்கு அந்த கவலை இருந்தது போலும் இல்லை.




1 comment: