Monday, December 28, 2009

நகரா கணேசன்

நகரா கணேசன் தூக்குப் போட்டுக்கிட்டானாம். செட்டித்தெருவே பரபரப்பாய் இருந்தது. நகரா கணேசனுக்கு அறுப்பத்தஞ்சு, எழுபது வயதிருக்கும். இன்னும் கொஞ்ச நாளில் தானாகவே இறந்துவிடுவான். அதற்குள் போய் விட்டான்.

Pune Beggar நகரா கணேசன் பிள்ளையார் கோவிலில் நகரா அடிப்பான். நகரா என்பது முரசு போல் இருக்கும். கோவில் பூஜை சமயங்களில் அடிக்கப்படும். கணேசன் அதை ஒரு தாளத்துடன் அடிப்பான். வேறு யாருக்கும் அது வராது. முன்னும் பின்னும் அசையும் அவனது கைகள் வசீகரமூட்டும். சிலநேரம் மணியாட்டும் சோமுவிடம் பேசிக்கொண்டே அடிப்பான். ஆனால் இசையில் மாற்றமிராது.
சுமார் ஐம்பது ஆண்டுகள் அதை செய்வதால், அந்த இசை அவன் பிரஞ்கையின்றி, அவன் கைவழி வழிந்தோடும்.

அவன் இல்லாதபோது, நாங்கள் சிலநேரம் நகராவை அடித்துப்பார்ப்போம்.

“டொப் டொப்” , உடனே கணேசனின் குரல் எங்கிருந்தாவது ஒலிக்கும்.
“யார்லது பொலையாடி மக்களா.. ”
கோவக்காரன், கோவில் என்று பார்க்காமல் கெட்டவார்த்தையில் திட்டுவான். நகரா, கோவில் வாசல் அருகிலேயே இருப்பதால், சத்தம் கேட்டதும், சிட்டாக பறந்துவிடுவோம்.

 கோவிலில் “நிறை” வரும்போது, கணேசன் பிசியாகிவிடுவான். நிறையன்று, கோவிலுக்கு சொந்தமான வயலில் நெல்லறுத்து, அந்த கதிரை எல்லோருக்கும் கொடுப்பார்கள். பச்சரிசி பாயசக்கட்டி விற்பார்கள்.  ஒரு கட்டி மூணு ரூபாய். டிரஸ்டி ஆபிஸில் டோக்கன் வாங்கி கோவிலில் கொடுக்க வேண்டும். பெரிய வரிசை நிற்கும்.


கணேசன் சம்பளம் ஆறு மாதத்துக்கு ஒருமுறை நாலு கோட்டை நெல். தினமும் இரண்டு சோத்துக்கட்டி. குழம்பு அவ்வளவுதான்.
அதனால் கணேசன் முதலோடி தேசியப்பனிடம் போய்
”முதலோடி ஒரு 20 டோக்கன் தாங்க, சம்பளத்துல கழிச்சுகுங்க, கொஞ்சம் சிலவிருக்கு “ என்பான்.

“ஏய் இப்பதான நெல்லளந்தோம், போய் டிரஸ்டிட்ட சீட்டு வாங்கிட்டு வா” என்பார்.

டிரஸ்டி தாணுவிடம் தலையை சொறிவான், அவர் சீட்டு கொடுத்துவிடுவார். கணேசன் கேட்டு யாரும் மறுத்ததில்லை. அவன் கோவிலை நம்பியே வாழ்பவன் என்று எல்லோருக்கும் தெரியும். டோக்கனை விற்று, கள்ளுக்கடைக்கு போய்விடுவான். தினமும் குடிக்கமாட்டான். இது போன்ற சமயங்களில்தான்.

கோவில் காலையில் ஐந்து மணிக்கு நடை திறந்து, ஒன்பது மணிக்கு அடைப்பார்கள். பிறகு மாலை ஆறு மணியிலிந்து ஒன்பது மணி வரை. இடைப்பட்ட பகல் முழுவதும், சோமுவும், கணேசனும் கோவில் வடக்கு வாசல் திண்ணையில் அமர்ந்து கொள்வார்கள். கணேசன் ஒரு கட்டு பீடியுடன் உட்காருவான். ஒன்றை பற்றவைப்பான். கணேசன் எம்.ஜி.ஆர் கட்சி, சோமு கருணாநிதி. அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி. சோமு திட்ட ஆரம்பிப்பான். கணேசனும் ஆக்ரோஷமாய் அவனை எதிர்கொள்வான்.

“சொட்டப்பய கேனாமூனான்னு பேசுவான், அதக்கேட்டுட்டு சொல்ற, இன்னைக்கு தினத்தந்திய பாரு”

சோமுவுக்கு படிக்கத்தெரியாது. கணேசனும் ஆதாரத்துடன் பேசுகிறான். சோமு வேறெங்கோ பார்த்துகொண்டு அமைதியாகிவிடுவான்.

பீடி தீரும்போது, அந்த கங்குலேயே அடுத்த பீடி பற்றவைப்பான். உச்சயிக்கு சாப்பிடமாட்டார்கள்., காலையில் கோவிலில் சாப்பிடும் கட்டி சோற்றோடு சரி. திண்ணையிலேயே படுத்து உறங்குவார்கள். சாயங்காலம் செட்டிக்குளம் குறிஞ்சி டீக்கடையில் டீ குடித்துவிட்டு, கோவிலுக்கு வருவார்கள்.

கோவில் ஐதீககங்கள், கணேசனுக்கு அத்துப்பிடி. புது டிரஸ்டிகள், ஏதாவது சந்தேகமிருந்தால், “ஏ நகரா கணேசனிடம் கேளு” என்பார்கள்.

கோவில் தேர்தல் முடிந்தது. புது டிரஸ்டிகள் வந்தார்கள். டிரஸ்டி தாணு நிற்கவில்லை. வயதாகிவிட்டது. சுமார் முப்பது வருடம் டிரஸ்டியாக இருந்துவிட்டார். அதனால் அவர் மகன் சி.டி. பெருமாள் நின்றான். இளவயது, ஸ்கூல் வாத்தியார். பரபரப்பாக செயல்பட்டான். கோவிலுக்கு வெள்ளை அடித்தான். பராமரிப்பு வேலைகள் தொடங்கினான். அடுத்த வாரம் நிறை.

நிறை வந்தது. இந்த வருசம் கட்டி நாலு ரூபாய். வழக்கம்போல் கணேசனிடம் முதலோடி டிரஸ்டியிடம் சீட் வாங்கிவர சொன்னார்.

டிரஸ்டி சி.டி.பெருமாள் ரொம்ப பரபரப்பாக இருந்தான். தான் பதவியேற்று முதல் நிறை.

கணேசன், ‘முதலாளி”

“என்ன”

“ஒரு இருவது டோக்கன் வேணும், சம்பளத்துல கழிச்சுக்கலாம்”

“இங்க கட்டியே குறவா கிடக்கு, இப்ப முடியாது”

“எல்லா வருசமும் உங்க அப்பா எனக்கு தருவாரு”

“சொன்னா கேளுடே, போ” என்று வேறு பக்கம் நகர்ந்தான்.

வருசத்துக்கு ஒரு முறை கிடைக்கும் இந்த சலுகை, திடீரென இல்லாது போனது. அதுவும் ஒரு சின்ன பயல் இவ்வளவு வருசம் கோவிலுக்காக உழைத்த தன்னை உதாசீனப்படுத்தியது, கணேசனுக்கு ஆத்திரத்தை கிளப்பியது.

வேறுப்பக்கம் திரும்பிக்கொண்டு கோவிலில் சத்தம் போட ஆரம்பித்தான்.

“சம்பளத்துல கழிச்சுக்கோன்ன்னுதான சொன்னேன், இவன் பெரிய மயிரு மாதிரி பேசுதான்”

ஏக வசனத்தில் புலம்பினான்.

நிறைக்கு வந்த கூட்டம் திரும்பி பார்த்தது. கூட வேலைப்பார்ப்பவர்கள், சமாதான படுத்த முயன்றனர். கணேசனுக்கு ஆறவில்லை.

டிரஸ்டி, கூட்டம் ஒரு பக்கம் திரும்புவதை பார்த்து, அங்கு வந்து

”ஏய் கணேசா, சத்தம் போடாத, வெளிய போ” என்று கையை நீட்டினான்.

கணேசன் ஆவேசத்தோடு, சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான்.
டிரஸ்டிக்கு கோபம் வந்து, கணேசன் செவிட்டில் ஒரு அடி விட்டான். கழுத்து துண்டைப் பிடித்து கோவில் வாசலில் தள்ளினான். கணேசன் தட்டுதடுமாறி விழுந்தான். யாரும் தூக்க வரவில்லை.

கணேசன் எழுந்து, கோவில் திண்ணையில் அமர்ந்து கொண்டான். ஆனால் வேறு எதுவும் பேசவில்லை.

பூஜைக்கு, பொய்சொல்லான், நகரா அடித்தான்.

அன்றும், அடுத்த நாளும் கணேசன் கோவிலுக்கு வரவில்லை. இன்று காலையில்தான் தகவல் பரவியது. நகரா கணேசன் தூக்குப் போட்டுக்கிட்டானாம்.

*  * *
இன்றும் கோவிலில் நகரா சத்தம் தொடர்கிறது. கணேசனின் தாளத்திலல்லாமல் வேறொரு தாளத்தில்.
No comments:

Post a Comment