Monday, December 28, 2009

மேலங்கோட்டு அம்மன் சத்தியம்

சங்கர் எங்கள் குரூப்பின் தலைவன். எதிரணிக்கு திருவாழி. எப்படி இந்த அணி உருவானதென்றே எனக்கு ஞாபகம் இல்லை. எங்கள் அணியில்தான் ஆட்கள் அதிகம். காரணம் சங்கர்தான். அவன்தான் ஏரியாவின் ஆட்ட சீசனை துடங்கி வைப்பான். பம்பர சீசனிலிருந்து, கலச்சிக்கு. அவன் துவங்கிவிட்டால், எல்லாரும் அதைதான் ஆடுவோம். திருவாழி குரூப்பிற்கும் வேறு வழி இல்லை.

659px-Isakki கணேசன், எங்கள் தெருவில் புதிதாக குடிவந்தான். சங்கரின் எதிர்வீடு. வந்ததும் எங்கள் குரூப்பில் சேர்ந்து விட்டான். சேர்ந்ததுமே சங்கர் கூட்டம் போட்டு சங்கத்தின் “ரூல்ஸ்” களை விளக்கினான். முக்கியமா திருவாழிகூட உள்ளவங்களோட பேசக்கூடாது. கணேசன் “ஏன்” என்று கேட்டான். எங்களுக்கு அதிர்ச்சியா இருந்தது. யாரும் அவனை எதிர்த்து பேசியதில்லை. சங்கருக்கும் அந்த அதிர்ச்சியிருந்தது. முறைத்துவிட்டு, “சொன்னத செய்ல, இல்லைன்னா போயிறு” என்றான்.

கணேசன் எல்லா விளையாட்டிலும் திறமையானவன். அதுவரை சங்கரும், சுடலையும்தான் எல்லா ஆட்டத்திலும் ஜெயிப்பார்கள். அவர்கள்தான்  அம்பயர்கள். வைத்ததுதான் சட்டம். சிலநேரம் ரூல்ஸ்களை மாற்றி தானே ஜெயித்ததாக அறிவிப்பான். கணேசன் அவர்களுக்கு ஒரு சவாலாகவே இருந்தான். தோல்வியே காணாத சங்கர் அது முதல் அப்பப தோற்க ஆரம்பித்தான். சங்கருக்கும், கணேசனுக்கும் ஒரு பனிப்போரே நடந்தது
.
 
எனக்கு கணேசனை பிடிக்கும். அவனுக்கும். சங்கர் கணேசனிடம் தோற்கும்போதல்லாம் எனக்கு சந்தோஷமாக இருக்கும். நாங்கள் சங்கரின் அடிமை போல் நடந்து கொள்வோம். கணேசன் அப்படியில்லை கொஞ்சம் சுதந்திரமாகவே நடந்துகொண்டான். என் தோளில் கைப்போட்டுக் கொண்டுதான் சுற்றுவான். சாயுபு கடையில், பப்படப்பு, தேன் முட்டாய் வாங்கி தருவான்.

கணேசன் சங்கருடன் சிலநேரம் வாதிப்பான். சங்கர் “வால இவன்ட்ட கேப்பம்” என்று என்னிடம் தீர்ப்புக்கு வருவார்கள். நான் சங்கர் சொன்ன சப்பைக்கட்டை அப்படியே ஒப்பிப்பேன். ”பாத்தியா இப்ப என்னல சொல்லுத”. கணேசன் என்னை முறைத்துவிட்டு சென்றுவிடுவான். சங்கர் நிம்மதியாக ஆட்டத்தை தொடருவான், பிரச்சனையில்லாமல் ஜெயித்துக்கொண்டே.

இது அதிகம் நாள் நீடிக்கவில்லை. கணேசன் திருவாழி குரூப்பில் போய் சேர்ந்துவிட்டான். எனக்குதான் சங்கடம் இனிமேல் அவனிடம் பேச முடியாது. திருவாழியிடம் சேரும் தைரியமும் இல்லை. திருவாழி குரூப்பில் ஜனநாயம் இருந்தது. கணேசன் அங்கு சந்தோஷமாக இருந்ததாகவே தோன்றியது.

கணேசனிடம் இழந்தது அவன் நட்பை மட்டுமல்ல, அவன் வாங்கிதரும் முட்டாய்களையும்தான். எனக்கு வீட்டில் பைசா தரமாட்டார்கள். கணேசன் அப்பா வட்டிக்கு பணம் விடுபவர். அதனால் கணேசன் எப்போதுமே சில சில்லறைகளை பாக்கெட்டில் வைத்திருப்பான்.

எதிர் குரூப்பில் இருப்பவருக்கு வட்டப்பெயர் வைப்போம். திருவாழிக்கு “கருப்பட்டி”. கறுப்பாயிருப்பான்.  கணேசன் வீட்டில் ஆடு வளர்த்தார்கள். அதனால் அவன் வட்டபேரு ஆட்டுக்குட்டி கணேசன். அவன் தனியாக போகும்போது ”ஆட்டுக்குட்டி’ என்று கூப்பிடுவோம். முறைத்துவிட்டு செல்வான்.

ஆறுமாதம் இருக்கும் கணேசனிடம் பேசி. ஒருநாள் “அரைக்கட்டி” லைபாய் வாங்க கட்டையன் கடைக்கு போனேன். அங்கு கணேசனும் நின்றிருந்தான். என்னைப் பார்த்ததும் சிரித்தான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுற்றிப்பார்த்தேன், குரூப்பில் யாரும் தென்படவில்லை. சிரித்தேன். தேன்முட்டாய்களை கையில் வைத்திருந்தான். ஒன்றை தந்தான். “வேண்டா” என்றேன். ஆனால் வாங்கிக் கொண்டேன். லைபாயை வாங்கி கொண்டு நடந்தோம். அவன் வேறு எதுவும் பேசவில்லை. என்னுடனேயே நடந்து வந்துகொண்டிருந்தான். பழய கணேசனாயிருந்தால் என் தோளில் கைப்போட்டிருப்பான். சேர்ந்தே தெரு திரும்பினோம்.

தூரத்தில் வந்து கொண்டிருந்த சங்கர் எங்களைப் பார்த்தான். நான் வேகமெடுத்து வீட்டுக்கு ஓடினேன்.

சாயங்காலம் குரூப்பை கூட்டி, பஞ்சயாத்து வைத்தான்.

“ரெண்டுபேரும் சேந்து வந்தத நான் பாத்தேன், அவ்ன்கிட்ட பேசினாயால”

நான் உறுதியா “இல்ல” என்றேன்.

”உங்க அம்மா சத்தியமா சொல்லுல” சங்கர் கையை நீட்டினான்.

நான் தயங்கி அவன் கைமீது கைவைத்தேன்.

“அம்மா சத்தியமா பேசல”

“லே அவன் “எலிக்கு” அம்மான்னு மனசுக்குள்ள சொல்லி சத்தியம் போட்டிருப்பான், மேலங்கோட்டு அம்மன் மேல சத்தியம் போட சொல்லு” என்று சிவதாணு இளக்கி விட்டான்,

எனக்கு வேர்க்க ஆரம்பித்தது.

மேலங்கோட்டு அம்மன் சத்தியத்துக்கு மேல் எதுவுமே இல்லை. பொய் சத்தியம் செய்தால் அவ்வளவுதான். நிறைய சந்தர்ப்பங்களில் மேலங்கோட்டு அம்மன் சத்தியம் மூலம் பல உண்மைகளை வரவழைத்துள்ளோம். தான் நிரபராதி என்பதை நிரூபிக்கவும் அது பயன்படும்.

” சரி மேலங்கோட்டு அம்மன் சத்தியமா பேசலன்னு சொல்லுல”

கை நீண்டே இருந்தது.

ஒரு பக்கம் மேலங்கோட்டு அம்மன் மேல் பயம், இன்னொரு பக்கம், பேசினேன் என்று சொன்னால், சங்கரின் கூட்டத்திலிருந்து வெளியேற்றி விட்டுவானோ என்று பயம். அதுமட்டுமில்லாமல் “வேண்டா” என்ற ஒரு வார்த்தைதான் பேசினேன். அது பேசினதாக ஆகுமா என்று குழப்பம்.

சத்தியம் செய்துவிட்டு வந்துவிட்டேன்.

அன்று ராத்திரியே சின்னம்மை வந்து விட்டது. ராத்திரியில், பயந்து பயந்து அலறினேனாம். கணேசமணி ஆஸ்பத்திரியில் காண்பித்தார்கள். ஒருவாரத்தில் சரியானது.

அன்று கூட்டத்தில் சங்கர் சொன்னான். ” பொய் சத்தியம் பண்ணல்ல, அதுவும் மேலங்கோட்டு அம்மன் மேல, அதான் அம்ம போட்டிருச்சு”

எனக்கு இன்னும் மேலங்கோட்டு அம்மன் மேல் பயம் கூடியது.

அதன் பிறகு, கணேசன், வீடு மாறிப் போகும் வரை அவனிடம் பேசவேயில்லை.
No comments:

Post a Comment