Monday, December 28, 2009

நகரா கணேசன்

நகரா கணேசன் தூக்குப் போட்டுக்கிட்டானாம். செட்டித்தெருவே பரபரப்பாய் இருந்தது. நகரா கணேசனுக்கு அறுப்பத்தஞ்சு, எழுபது வயதிருக்கும். இன்னும் கொஞ்ச நாளில் தானாகவே இறந்துவிடுவான். அதற்குள் போய் விட்டான்.

Pune Beggar நகரா கணேசன் பிள்ளையார் கோவிலில் நகரா அடிப்பான். நகரா என்பது முரசு போல் இருக்கும். கோவில் பூஜை சமயங்களில் அடிக்கப்படும். கணேசன் அதை ஒரு தாளத்துடன் அடிப்பான். வேறு யாருக்கும் அது வராது. முன்னும் பின்னும் அசையும் அவனது கைகள் வசீகரமூட்டும். சிலநேரம் மணியாட்டும் சோமுவிடம் பேசிக்கொண்டே அடிப்பான். ஆனால் இசையில் மாற்றமிராது.
சுமார் ஐம்பது ஆண்டுகள் அதை செய்வதால், அந்த இசை அவன் பிரஞ்கையின்றி, அவன் கைவழி வழிந்தோடும்.

அவன் இல்லாதபோது, நாங்கள் சிலநேரம் நகராவை அடித்துப்பார்ப்போம்.

“டொப் டொப்” , உடனே கணேசனின் குரல் எங்கிருந்தாவது ஒலிக்கும்.
“யார்லது பொலையாடி மக்களா.. ”
கோவக்காரன், கோவில் என்று பார்க்காமல் கெட்டவார்த்தையில் திட்டுவான். நகரா, கோவில் வாசல் அருகிலேயே இருப்பதால், சத்தம் கேட்டதும், சிட்டாக பறந்துவிடுவோம்.

 கோவிலில் “நிறை” வரும்போது, கணேசன் பிசியாகிவிடுவான். நிறையன்று, கோவிலுக்கு சொந்தமான வயலில் நெல்லறுத்து, அந்த கதிரை எல்லோருக்கும் கொடுப்பார்கள். பச்சரிசி பாயசக்கட்டி விற்பார்கள்.  ஒரு கட்டி மூணு ரூபாய். டிரஸ்டி ஆபிஸில் டோக்கன் வாங்கி கோவிலில் கொடுக்க வேண்டும். பெரிய வரிசை நிற்கும்.


கணேசன் சம்பளம் ஆறு மாதத்துக்கு ஒருமுறை நாலு கோட்டை நெல். தினமும் இரண்டு சோத்துக்கட்டி. குழம்பு அவ்வளவுதான்.
அதனால் கணேசன் முதலோடி தேசியப்பனிடம் போய்
”முதலோடி ஒரு 20 டோக்கன் தாங்க, சம்பளத்துல கழிச்சுகுங்க, கொஞ்சம் சிலவிருக்கு “ என்பான்.

“ஏய் இப்பதான நெல்லளந்தோம், போய் டிரஸ்டிட்ட சீட்டு வாங்கிட்டு வா” என்பார்.

டிரஸ்டி தாணுவிடம் தலையை சொறிவான், அவர் சீட்டு கொடுத்துவிடுவார். கணேசன் கேட்டு யாரும் மறுத்ததில்லை. அவன் கோவிலை நம்பியே வாழ்பவன் என்று எல்லோருக்கும் தெரியும். டோக்கனை விற்று, கள்ளுக்கடைக்கு போய்விடுவான். தினமும் குடிக்கமாட்டான். இது போன்ற சமயங்களில்தான்.

கோவில் காலையில் ஐந்து மணிக்கு நடை திறந்து, ஒன்பது மணிக்கு அடைப்பார்கள். பிறகு மாலை ஆறு மணியிலிந்து ஒன்பது மணி வரை. இடைப்பட்ட பகல் முழுவதும், சோமுவும், கணேசனும் கோவில் வடக்கு வாசல் திண்ணையில் அமர்ந்து கொள்வார்கள். கணேசன் ஒரு கட்டு பீடியுடன் உட்காருவான். ஒன்றை பற்றவைப்பான். கணேசன் எம்.ஜி.ஆர் கட்சி, சோமு கருணாநிதி. அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி. சோமு திட்ட ஆரம்பிப்பான். கணேசனும் ஆக்ரோஷமாய் அவனை எதிர்கொள்வான்.

“சொட்டப்பய கேனாமூனான்னு பேசுவான், அதக்கேட்டுட்டு சொல்ற, இன்னைக்கு தினத்தந்திய பாரு”

சோமுவுக்கு படிக்கத்தெரியாது. கணேசனும் ஆதாரத்துடன் பேசுகிறான். சோமு வேறெங்கோ பார்த்துகொண்டு அமைதியாகிவிடுவான்.

பீடி தீரும்போது, அந்த கங்குலேயே அடுத்த பீடி பற்றவைப்பான். உச்சயிக்கு சாப்பிடமாட்டார்கள்., காலையில் கோவிலில் சாப்பிடும் கட்டி சோற்றோடு சரி. திண்ணையிலேயே படுத்து உறங்குவார்கள். சாயங்காலம் செட்டிக்குளம் குறிஞ்சி டீக்கடையில் டீ குடித்துவிட்டு, கோவிலுக்கு வருவார்கள்.

கோவில் ஐதீககங்கள், கணேசனுக்கு அத்துப்பிடி. புது டிரஸ்டிகள், ஏதாவது சந்தேகமிருந்தால், “ஏ நகரா கணேசனிடம் கேளு” என்பார்கள்.

கோவில் தேர்தல் முடிந்தது. புது டிரஸ்டிகள் வந்தார்கள். டிரஸ்டி தாணு நிற்கவில்லை. வயதாகிவிட்டது. சுமார் முப்பது வருடம் டிரஸ்டியாக இருந்துவிட்டார். அதனால் அவர் மகன் சி.டி. பெருமாள் நின்றான். இளவயது, ஸ்கூல் வாத்தியார். பரபரப்பாக செயல்பட்டான். கோவிலுக்கு வெள்ளை அடித்தான். பராமரிப்பு வேலைகள் தொடங்கினான். அடுத்த வாரம் நிறை.

நிறை வந்தது. இந்த வருசம் கட்டி நாலு ரூபாய். வழக்கம்போல் கணேசனிடம் முதலோடி டிரஸ்டியிடம் சீட் வாங்கிவர சொன்னார்.

டிரஸ்டி சி.டி.பெருமாள் ரொம்ப பரபரப்பாக இருந்தான். தான் பதவியேற்று முதல் நிறை.

கணேசன், ‘முதலாளி”

“என்ன”

“ஒரு இருவது டோக்கன் வேணும், சம்பளத்துல கழிச்சுக்கலாம்”

“இங்க கட்டியே குறவா கிடக்கு, இப்ப முடியாது”

“எல்லா வருசமும் உங்க அப்பா எனக்கு தருவாரு”

“சொன்னா கேளுடே, போ” என்று வேறு பக்கம் நகர்ந்தான்.

வருசத்துக்கு ஒரு முறை கிடைக்கும் இந்த சலுகை, திடீரென இல்லாது போனது. அதுவும் ஒரு சின்ன பயல் இவ்வளவு வருசம் கோவிலுக்காக உழைத்த தன்னை உதாசீனப்படுத்தியது, கணேசனுக்கு ஆத்திரத்தை கிளப்பியது.

வேறுப்பக்கம் திரும்பிக்கொண்டு கோவிலில் சத்தம் போட ஆரம்பித்தான்.

“சம்பளத்துல கழிச்சுக்கோன்ன்னுதான சொன்னேன், இவன் பெரிய மயிரு மாதிரி பேசுதான்”

ஏக வசனத்தில் புலம்பினான்.

நிறைக்கு வந்த கூட்டம் திரும்பி பார்த்தது. கூட வேலைப்பார்ப்பவர்கள், சமாதான படுத்த முயன்றனர். கணேசனுக்கு ஆறவில்லை.

டிரஸ்டி, கூட்டம் ஒரு பக்கம் திரும்புவதை பார்த்து, அங்கு வந்து

”ஏய் கணேசா, சத்தம் போடாத, வெளிய போ” என்று கையை நீட்டினான்.

கணேசன் ஆவேசத்தோடு, சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தான்.
டிரஸ்டிக்கு கோபம் வந்து, கணேசன் செவிட்டில் ஒரு அடி விட்டான். கழுத்து துண்டைப் பிடித்து கோவில் வாசலில் தள்ளினான். கணேசன் தட்டுதடுமாறி விழுந்தான். யாரும் தூக்க வரவில்லை.

கணேசன் எழுந்து, கோவில் திண்ணையில் அமர்ந்து கொண்டான். ஆனால் வேறு எதுவும் பேசவில்லை.

பூஜைக்கு, பொய்சொல்லான், நகரா அடித்தான்.

அன்றும், அடுத்த நாளும் கணேசன் கோவிலுக்கு வரவில்லை. இன்று காலையில்தான் தகவல் பரவியது. நகரா கணேசன் தூக்குப் போட்டுக்கிட்டானாம்.

*  * *
இன்றும் கோவிலில் நகரா சத்தம் தொடர்கிறது. கணேசனின் தாளத்திலல்லாமல் வேறொரு தாளத்தில்.
மேலங்கோட்டு அம்மன் சத்தியம்

சங்கர் எங்கள் குரூப்பின் தலைவன். எதிரணிக்கு திருவாழி. எப்படி இந்த அணி உருவானதென்றே எனக்கு ஞாபகம் இல்லை. எங்கள் அணியில்தான் ஆட்கள் அதிகம். காரணம் சங்கர்தான். அவன்தான் ஏரியாவின் ஆட்ட சீசனை துடங்கி வைப்பான். பம்பர சீசனிலிருந்து, கலச்சிக்கு. அவன் துவங்கிவிட்டால், எல்லாரும் அதைதான் ஆடுவோம். திருவாழி குரூப்பிற்கும் வேறு வழி இல்லை.

659px-Isakki கணேசன், எங்கள் தெருவில் புதிதாக குடிவந்தான். சங்கரின் எதிர்வீடு. வந்ததும் எங்கள் குரூப்பில் சேர்ந்து விட்டான். சேர்ந்ததுமே சங்கர் கூட்டம் போட்டு சங்கத்தின் “ரூல்ஸ்” களை விளக்கினான். முக்கியமா திருவாழிகூட உள்ளவங்களோட பேசக்கூடாது. கணேசன் “ஏன்” என்று கேட்டான். எங்களுக்கு அதிர்ச்சியா இருந்தது. யாரும் அவனை எதிர்த்து பேசியதில்லை. சங்கருக்கும் அந்த அதிர்ச்சியிருந்தது. முறைத்துவிட்டு, “சொன்னத செய்ல, இல்லைன்னா போயிறு” என்றான்.

கணேசன் எல்லா விளையாட்டிலும் திறமையானவன். அதுவரை சங்கரும், சுடலையும்தான் எல்லா ஆட்டத்திலும் ஜெயிப்பார்கள். அவர்கள்தான்  அம்பயர்கள். வைத்ததுதான் சட்டம். சிலநேரம் ரூல்ஸ்களை மாற்றி தானே ஜெயித்ததாக அறிவிப்பான். கணேசன் அவர்களுக்கு ஒரு சவாலாகவே இருந்தான். தோல்வியே காணாத சங்கர் அது முதல் அப்பப தோற்க ஆரம்பித்தான். சங்கருக்கும், கணேசனுக்கும் ஒரு பனிப்போரே நடந்தது
.
 
எனக்கு கணேசனை பிடிக்கும். அவனுக்கும். சங்கர் கணேசனிடம் தோற்கும்போதல்லாம் எனக்கு சந்தோஷமாக இருக்கும். நாங்கள் சங்கரின் அடிமை போல் நடந்து கொள்வோம். கணேசன் அப்படியில்லை கொஞ்சம் சுதந்திரமாகவே நடந்துகொண்டான். என் தோளில் கைப்போட்டுக் கொண்டுதான் சுற்றுவான். சாயுபு கடையில், பப்படப்பு, தேன் முட்டாய் வாங்கி தருவான்.

கணேசன் சங்கருடன் சிலநேரம் வாதிப்பான். சங்கர் “வால இவன்ட்ட கேப்பம்” என்று என்னிடம் தீர்ப்புக்கு வருவார்கள். நான் சங்கர் சொன்ன சப்பைக்கட்டை அப்படியே ஒப்பிப்பேன். ”பாத்தியா இப்ப என்னல சொல்லுத”. கணேசன் என்னை முறைத்துவிட்டு சென்றுவிடுவான். சங்கர் நிம்மதியாக ஆட்டத்தை தொடருவான், பிரச்சனையில்லாமல் ஜெயித்துக்கொண்டே.

இது அதிகம் நாள் நீடிக்கவில்லை. கணேசன் திருவாழி குரூப்பில் போய் சேர்ந்துவிட்டான். எனக்குதான் சங்கடம் இனிமேல் அவனிடம் பேச முடியாது. திருவாழியிடம் சேரும் தைரியமும் இல்லை. திருவாழி குரூப்பில் ஜனநாயம் இருந்தது. கணேசன் அங்கு சந்தோஷமாக இருந்ததாகவே தோன்றியது.

கணேசனிடம் இழந்தது அவன் நட்பை மட்டுமல்ல, அவன் வாங்கிதரும் முட்டாய்களையும்தான். எனக்கு வீட்டில் பைசா தரமாட்டார்கள். கணேசன் அப்பா வட்டிக்கு பணம் விடுபவர். அதனால் கணேசன் எப்போதுமே சில சில்லறைகளை பாக்கெட்டில் வைத்திருப்பான்.

எதிர் குரூப்பில் இருப்பவருக்கு வட்டப்பெயர் வைப்போம். திருவாழிக்கு “கருப்பட்டி”. கறுப்பாயிருப்பான்.  கணேசன் வீட்டில் ஆடு வளர்த்தார்கள். அதனால் அவன் வட்டபேரு ஆட்டுக்குட்டி கணேசன். அவன் தனியாக போகும்போது ”ஆட்டுக்குட்டி’ என்று கூப்பிடுவோம். முறைத்துவிட்டு செல்வான்.

ஆறுமாதம் இருக்கும் கணேசனிடம் பேசி. ஒருநாள் “அரைக்கட்டி” லைபாய் வாங்க கட்டையன் கடைக்கு போனேன். அங்கு கணேசனும் நின்றிருந்தான். என்னைப் பார்த்ததும் சிரித்தான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சுற்றிப்பார்த்தேன், குரூப்பில் யாரும் தென்படவில்லை. சிரித்தேன். தேன்முட்டாய்களை கையில் வைத்திருந்தான். ஒன்றை தந்தான். “வேண்டா” என்றேன். ஆனால் வாங்கிக் கொண்டேன். லைபாயை வாங்கி கொண்டு நடந்தோம். அவன் வேறு எதுவும் பேசவில்லை. என்னுடனேயே நடந்து வந்துகொண்டிருந்தான். பழய கணேசனாயிருந்தால் என் தோளில் கைப்போட்டிருப்பான். சேர்ந்தே தெரு திரும்பினோம்.

தூரத்தில் வந்து கொண்டிருந்த சங்கர் எங்களைப் பார்த்தான். நான் வேகமெடுத்து வீட்டுக்கு ஓடினேன்.

சாயங்காலம் குரூப்பை கூட்டி, பஞ்சயாத்து வைத்தான்.

“ரெண்டுபேரும் சேந்து வந்தத நான் பாத்தேன், அவ்ன்கிட்ட பேசினாயால”

நான் உறுதியா “இல்ல” என்றேன்.

”உங்க அம்மா சத்தியமா சொல்லுல” சங்கர் கையை நீட்டினான்.

நான் தயங்கி அவன் கைமீது கைவைத்தேன்.

“அம்மா சத்தியமா பேசல”

“லே அவன் “எலிக்கு” அம்மான்னு மனசுக்குள்ள சொல்லி சத்தியம் போட்டிருப்பான், மேலங்கோட்டு அம்மன் மேல சத்தியம் போட சொல்லு” என்று சிவதாணு இளக்கி விட்டான்,

எனக்கு வேர்க்க ஆரம்பித்தது.

மேலங்கோட்டு அம்மன் சத்தியத்துக்கு மேல் எதுவுமே இல்லை. பொய் சத்தியம் செய்தால் அவ்வளவுதான். நிறைய சந்தர்ப்பங்களில் மேலங்கோட்டு அம்மன் சத்தியம் மூலம் பல உண்மைகளை வரவழைத்துள்ளோம். தான் நிரபராதி என்பதை நிரூபிக்கவும் அது பயன்படும்.

” சரி மேலங்கோட்டு அம்மன் சத்தியமா பேசலன்னு சொல்லுல”

கை நீண்டே இருந்தது.

ஒரு பக்கம் மேலங்கோட்டு அம்மன் மேல் பயம், இன்னொரு பக்கம், பேசினேன் என்று சொன்னால், சங்கரின் கூட்டத்திலிருந்து வெளியேற்றி விட்டுவானோ என்று பயம். அதுமட்டுமில்லாமல் “வேண்டா” என்ற ஒரு வார்த்தைதான் பேசினேன். அது பேசினதாக ஆகுமா என்று குழப்பம்.

சத்தியம் செய்துவிட்டு வந்துவிட்டேன்.

அன்று ராத்திரியே சின்னம்மை வந்து விட்டது. ராத்திரியில், பயந்து பயந்து அலறினேனாம். கணேசமணி ஆஸ்பத்திரியில் காண்பித்தார்கள். ஒருவாரத்தில் சரியானது.

அன்று கூட்டத்தில் சங்கர் சொன்னான். ” பொய் சத்தியம் பண்ணல்ல, அதுவும் மேலங்கோட்டு அம்மன் மேல, அதான் அம்ம போட்டிருச்சு”

எனக்கு இன்னும் மேலங்கோட்டு அம்மன் மேல் பயம் கூடியது.

அதன் பிறகு, கணேசன், வீடு மாறிப் போகும் வரை அவனிடம் பேசவேயில்லை.
Sunday, December 27, 2009

வாயப்பன்

வாயப்பனின் சொந்த பெயர் ஐயப்பன். அவனுக்கு கட்டை நாக்கு. அவனிடம் பெயர் கேட்டால் வாயப்பன் என்றுதான் சொல்வான். அவன் அப்பா நெட்ட நடராஜன், ஆறடிக்கு மேல் உயரம். செட்டித்தெரு பிள்ளையார் கோவிலில் பாத்திரம் தேய்ப்பார்.
  பிள்ளையார் கோவில் 500 குடும்பங்கள் கொண்ட ‘ஏழூர் செட்டியார்களின்” குடும்ப 2312581231_0e252d034bகோவில். வந்தாரை வாழ வைக்குமிடம். எல்லோருக்கும் வேலை உண்டு. சம்பளம் ஆறு மாதத்துக்கு ஒருமுறை நாலு கோட்டை நெல். தினமும் இரண்டு சோத்துக்கட்டி. குழம்பு அவ்வளவுதான். பல குடும்பங்கள் அந்த கோவிலை நம்பிதான் இருந்தது. கோவிலில் வேலை பார்ப்பவரெல்லாம், ஒரு வகையில் செட்டித்தெரு வீட்டுக்காரர்களின் வேலைக்காரர்கள் போல்தான்.

வாயப்பனும் அவன் அப்பாவுக்கு உதவ வந்து, கோவிலிலேயே நிரந்தரம் ஆகிவிட்டான். கோவில் காலையில் ஐந்து மணிக்கு நடை திறந்து, ஒன்பது மணிக்கு அடைப்பார்கள். பிறகு மாலை ஆறு மணியிலிந்து ஒன்பது மணி வரை. இடைப்பட்ட பகல் முழுவதும், வாயப்பன் வீட்டுவேலைகள்தான் செய்து கொண்டிருப்பான். கூலி எதுவும் கொடுக்க மாட்டார்கள். இவனும் கேட்கமாட்டான்.

 

 

 

 

 

 

எனக்கு பத்து வயது இருக்கும்போது அவனுக்கு, முப்பதாவது இருக்கும். யாரும் அவன் வயசுக்கு மரியாதை கொடுப்பதில்லை. “லே வாயப்பா, இங்க வால” என்றுதான் அழைப்போம். அவனும் மனம் கோணாமல் வருவான்.

எப்பவாவது, கிருஷ்ணா டாக்கீஸில், எம்.ஜி.ஆர் படம் பார்த்து விட்டு வந்து கதை சொல்வான். என்னையொத்த சிறுவர்கள் அவனிடம் கதை கேட்பதில் அலாதிப் ப்ரியம். எங்களுக்கு போரடித்தால், அவனிடம் “எப்பல உன் கல்யாணம்” என்போம். இந்த கேள்விக்கு மட்டும் அவனுக்கு கோபம் வரும். “போங்கல” என்று கையை ஓங்குவான். அடிக்க மாட்டான். அடிக்க மாட்டானென்று தெரிந்தாலும், நாங்கள் பயந்தவர்கள் போல் சிதறி ஓடுவோம்.

செட்டித்தெருவில் யார் வீட்டிலாவது கல்யாணம் என்றால் வாயப்பன் ரொம்ப பிசியாகிவிடுவான். லோட் ஆட்டோ பிடித்து சமையல் பாத்திரம் இறக்குவான். வாழை மரம் கட்டுவான். பந்தியில் அவியல் விளம்புவான். அவியல் வாளி ரொம்ப கனமானது. தூக்க சிரமம், அதனால் அதை அவனிடம் தள்ளி விடுவார்கள்.

கடைசியில், இவனிடம் மோர் வாளி கொடுத்து அனுப்பி விட்டு, விளம்புகிறவர்களெல்லாம், இவனையே பார்த்து கொண்டிருப்பார்கள்.
வாயப்பன் பந்தியில் இறங்கி ஆரம்பிப்பான்.
“அண்ணே மோளு , அக்கா மோளு , கப்புல மோளு “
கொல்லென்று பந்தி முழுவதும் சிரிப்பொலி பரவும். பெண்கள் தலையை குனிந்து கொண்டு சிரிப்பார்கள்.

“ஏய் யார்லது இவன் கைல மோர கொடுத்தனுப்பசது” என்று டிரஸ்டி தேசியப்பன் சத்தம் போடுவார். ஆனால் ஒவ்வொரு பந்தியிலும் இது தொடரும். நாங்கள் ஒவ்வொரு முறையும், இதை முதல் தடவை கேட்பதுபோல் விழுந்து விழுந்து சிரிப்போம்.

காலம் ஓடிவிட்டது, ஊருக்கு போகும் போது கோவிலில் வாயப்பனை பார்ப்பேன். இனிமேல் எப்ப கல்யாணம் என்று கேட்கும் வயசை கடந்து விட்டான் வாயப்பன்.  “எப்படி இருக்க வாயப்பா” என்பேன். அதற்கு பதில் சொல்லாமல், “எப்ப வந்த” என்று தொடங்கி, ஏதோ பேசுவான். ஒன்றும் புரியாது. தலையை ஆட்டி விட்டு நகர்ந்து விடுவேன்.
கோவில் முடிந்ததும், கோவில் முகப்பிலேயே தனியாக உட்காந்திருப்பான். இப்ப அவனை யாரும் வீட்டு வேலை செய்ய கூப்பிடுவதில்லை. அவனை சுற்றி கதை கேட்கும் சிறுவர் கூட்டமும் இல்லை. அவனுக்கு அந்த கவலை இருந்தது போலும் இல்லை.
Friday, December 25, 2009

கழுத

திருவாழிக்கு இரண்டு தங்கைகள். சாவித்ரி, சுலோச்சனா. அப்பா இறந்து பத்து வருடம் ஆகிறது. அம்மா வீட்டுவேலை செய்கிறார். திருவாழி நல்லபெருமாள் ஜவுளிக்கடையில் கணக்கு எழுதுகிறான். அவன் அப்பாவும் அங்கேதான் வேலைப் பார்த்தார்.

சாவித்ரி ரொம்ப அமைதி. பிகாம் முடித்துவிட்டு ஆடிட் ஆபிஸில் வேலை செய்கிறாள். சுலோச்சனா நேரெதிர். வாயாடி, தைரியசாலி. காலேஜ் படிக்கிறாள். விகல்பம் இல்லாமல் எல்லோருடனும் பேசுவாள். அழகாகவும் இருப்பாள்.


திருவாழி கொஞ்சம் காட்டுமிராண்டி. தங்கைகளை சிலநேரம் அடிக்கவும் செய்வான்.
STL02 Sad Man வயசு பெண்கள் உள்ளதால், திருவாழி தன் நண்பர்களை அவன் வீட்டுக்கு அழைத்து செல்லமாட்டான். என்னைத் தவிர. என் மீது அவ்வளவு நம்பிக்கை. திருவாழி அம்மாவும் என்னிடம் நன்றாக பழகுவார்கள். 


சுலோச்சனாவுக்கு என்னை பிடிக்கும், எனக்கும்தான். அவளுக்கு காலேஜிலும் நிறைய ஆண் நண்பர்கள் உண்டு.  என்னிடம் நன்றாக பழகுவாள். எல்லோருக்கும் காதல் வரும் பருவம்தான் எனக்கும். ஆனால் அவள் என்னை காதலிக்கிறாளா என்று தெரியாது. ஒருநாள் என்னிடம் ஜாடை மாடையாய் சொன்னாள்.
நான் இடத்தை காலி செய்து விட்டு வந்துவிட்டேன்.

எனக்கு, ஆசையிருந்தாலும், திருவாழி என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை அதை தடுத்து விட்டது. இது எதுவும் திருவாழிக்கு தெரியாது. தெரியவும் கூடாது.


இது நடந்து ஒரு வருடம் ஒடி விட்டது. அதன் பிறகு திருவாழி வீட்டுக்கு போனால், நான் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் வராமல் பார்த்துக் கொண்டேன். ஆனால் சுலோச்சனா என்மீது வீசும் ஒரப்பார்வையை மட்டும் விடவில்லை.


தீபாவளிக்கு அடுத்த நாள் அதிகாலை, லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. என் வீட்டு கதவை யாரோ தட்டினார்கள். வெளியே திருவாழி குரல்தான் கேட்டது. எனக்கு பகீரென்றது. இவன் எதுக்கு இந்த நேரத்திலென்று. முகம் வாடியிருந்தது. ராத்திரி முழுவதும் தூங்காதது அவன் கண்களில் தெரிந்தது.


”என்னடே இந்த நேரத்ல”


பதில் உடனே சொல்லவில்லை. சிறிது இடைவெளிவிட்டு, “தங்கச்சிய காணோம், ராத்திரி வீட்டுக்கு வரல” என்றான். வேறு எதுவும் பேசவில்லை.


“வா, போலீஸ் ஸ்டேசன் போகலாம்”


“…….வேண்டாம், அவ அந்த மருந்து கட வச்சிருக்க, புறா கணேசன் மவன் கூடதான் ஒடி போயிருப்பா. நான் விசயம் தெரிஞ்சு ரெண்டு மூணுதடவ அடிச்சன், அவ கேட்கல, விட்டு தொல”.


எனக்கு துக்கம் தாங்கவில்லை. சுலோச்சனா இப்படி செய்துவிட்டாளே.


“சரி வா வீட்டுக்கு போகலாம்”


நான், சட்டையை போட்டு கொண்டு கிளம்பினேன். சாய்பு கடையில் ஒரு தம்மை பத்த வச்சான்.


முகத்தை கீழே தாழ்த்தி புகையை விட்டுகொண்டே எந்த முன்னுரையுமில்லாமல் சொன்னான், “ அப்பா செத்ததுக்கு பொறவு, ஒரு புது சட்ட வாங்க கூட மனசில்லாம, இதுகளுக்கு செய்தன், கண்டாரவோளி, இப்படி பண்ணிட்டு போய்ட்டு”


நான் எதுவும் பேசவில்லை. நடந்தோம்.


முக்கு திரும்பியதும் பார்த்தேன், திருவாழி வீடு, உறவினருக்காக காத்திருக்கும், பிணம் கிடத்திய வீடு போல், அதிகாலையில் அந்த வீடு மட்டும் விழித்திருந்தது.


வீட்டுக்குள் நுழைந்ததும், திருவாழியின் அம்மா, “மக்கலே, ஏதாவது தெரிஞ்சுதா”


“சும்மா போம்மா”


திருவாழி மாமா இருந்தார். யாரும் தூங்கவில்லை என்பது எல்லோர் கண்ணிலும் தெரிந்தது.
நான் முற்றத்தைப் பார்த்தேன். இங்கிருந்து எவ்வளவு பேசியிருக்கிறோம். மனசு கிடந்து அடித்தது.


”கொஞ்சம் நீத்தண்ணி தாம்மா” என்றான் திருவாழி.


”ஏட்டி, அண்ணனுக்கு, நீத்தண்ணி கொண்டா” என்றாள் அம்மா.


சுலோச்சனா நீத்தண்ணி கொண்டு வந்தாள்.


எனக்கு அவளை பார்த்ததும், இன்ப அதிர்ச்சி. என்னையறியாமல், நான் புன்னகைத்தேன். அந்த இடத்துக்கு அது அன்னியாமாய் பட்டது.


ஓ!! காணமல் போனது சாவித்ரி.


அவள் அப்படி பட்டவள் இல்லையென்பதால், எனக்கு யாரென்று திருவாழியிடம் கேட்கவே தோன்றவில்லை.

எனக்கு வயிற்றுக்குள் என்னவோ செய்தது.

சொம்பை கொடுத்து விட்டு அங்கேயே நின்றாள்.


திருவாழி சொம்பை திரும்ப கொடுத்து விட்டு, சுலோச்சனாவிடம், சொன்னான், “கழுத நீயாவது ஒழுங்காயிரு”சுலோச்சனா என்னைப் பார்த்தாள். நான் குனிந்து கொண்டேன்மூட்டபூச்சி மருந்து

நான், சுடலை, சங்கர் மூவரும் நண்பர்கள். சுடலையின் அப்பா செட்டிகுளம் ஒர்க்ஷாப்பில் ஒரு மெக்கானிக். குடிகாரர்.சுடலைக்கு 4 அக்கா, ஒரு அண்ணன். சங்கர் அப்பா, வாத்தியார். பிள்ளையார் கோவில் டிரஸ்டி.


இருவரும் படிப்பில் அவ்வளவு இல்லைஅடாவடிகளில் தேர்ந்தவர்கள். தனியாக சினிமாவுக்கு போவது, “திருட்டு தம்அடிப்பது எல்லாம் செய்வார்கள். பம்பரம்,கலச்சி (கோலிகுண்டு) எதுவானாலும் ஏரியா பசங்களை அதிர வைப்பார்கள்.


 V126apeet நான் தயிர்சாதம்அவர்களின் கலச்சிகளை என் பாக்கட்டில் போட்டுக்கொண்டு, அவர்கள் கேட்கும் போது கொடுப்பேன். அவர்களின் பம்பரம் தூரபோய் விழுந்தால் எடுத்து வருவேன். அவர்களோடேயே அலைந்து கொண்டிருப்பேன்.


ஒருமுறை சைக்கிளின்வால் டியூப்பைகொடுத்தால், மூன்று ரூபாய் கிடைக்குமென்று, தெருதெருவாய் போய் வீட்டு வாசல்களில் நிற்கும் சைக்கிளில் வால் டியூப்பபை திருடி கொண்டிருந்தார்கள். நானும் கூட போனேன். அப்போது அந்த வழி வந்த எங்கள் ஸ்கூல் பியூன் பார்த்து துரத்த, அவர்கள் இருவரும் ஒடிவிட, நான் மாட்டிகொண்டேன்.


என் பனியனை கழற்றி கையைக் கட்டி, ஸ்கூல் வாசலில் நிற்க வைத்து விட்டார்கள். இதை கேள்விப்பட்டு வந்த  என் சித்தப்பா, அந்த பியூனை அடிப் பின்னிவிட்டார். அவருக்கு என் மேல் பாசம் அதிகம், அதுவுமில்லாமல் நான் இப்படிபட்ட செயல்கள் செய்யமாட்டேன் என்று ஊருக்கே தெரியும். (அவ்வளவு தைரியசாலி).


அப்பா என்னை பின்னிவிட்டார். ஆனாலும் அவர்களின் நட்பை விட முடியவில்லை. ஒரு அடிமையின் மனபாவத்தோடேயே இருந்தேன். அது மட்டுமல்ல, எங்களின் எதிரி குரூப்பிற்கு திருவாழிதான் தலைவன். அவனை எனக்கு பிடிக்காது. அதனாலயே, இவர்களின் அண்டை எனக்கு தேவைப்பட்டது.


இப்ப விசயத்துக்கு வரேன். நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது, அவர்கள் இருவரும் எட்டாம் வகுப்பு. ஆண்டு தேர்வு முடிந்து ரிசல்ட் வந்தது. நான் பாஸ். இருவரும் பெயில். (ஏற்கனவே இருவரும் இன்னொரு வருடம் பெயில்). இருவர் வீட்டிலும் அடி,உதைக்கு கேட்கவே வேண்டாம்.


சாயங்காலம் வழக்கம்போல் அவர்களை சந்திக்க சென்றேன். கோவில் முகப்பில் இருந்தார்கள். நான் அருகில் சென்றேன். சங்கருக்குதான், அவமானம் தாங்க முடியவில்லை. பொறுக்க முடியாமல் சுடலையிடம் என்னை பார்த்து சொன்னான், “அடுத்த வருசம், இவங்கூடதான்ல நம்ம படிக்கனும்”.  அதில் நான் ஏதோ தவறு செய்துவிட்டது போன்ற தொனி இருந்தது. எனக்கோ அதிர்ச்சி. நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கோ நாளையிலிருந்து யாருடன் சுற்றுவதென்று தெரியவில்லை. நான் அநாதை ஆனது போன்ற உணர்வு இருந்தது.


அடுத்த நாள் காலை, எங்கள் குரூப் ராகவன் வந்து சொன்னான். சங்கரும் சுடலையும் மூட்டபூச்சி மருந்து குடிச்சுட்டு, கோபால் மாமா வீட்டு தோட்டத்துல கிடந்தாங்களாம். உயிர் இருக்காம், ஆஸ்பத்ரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்கன்னு.


எனக்கு அழுகையாக வந்தது. நான் என்ன தப்பு செய்தேன். என்கூட படிப்பது அவ்வளவு பெரிய அவமானமா?.


அப்புறம் தகவல் வந்தது. இருவரும் பிழைத்து விட்டார்கள். அதன் பிறகு, நான் அவர்களுடன் பேசுவதில்லை. திருவாழியுடன் நட்பானேன். அவன் அவ்வளவு மோசமில்லை.


இப்போது, சுடலை, செட்டிகுளம் ஜங்சனில் ஒரு பெரிய லாரி ஒர்க்ஷாப்க்கு ஒனர். சங்கர், ஒரு பெந்த்கோஸ்த் பெண்ணை காதலித்து, சர்ச்சில் பாதர் ஆகிவிட்டான்.


ஊருக்கு போனால் எப்போதாவது இவர்களை கடக்க நேரிடும். யாரோ போல் கடந்து சென்று விடுவோம்.


ஆனால் இன்று வரை புரியவில்லை, அந்த குழந்தைகால உளவியலை.