திருவாழிக்கு இரண்டு தங்கைகள். சாவித்ரி, சுலோச்சனா. அப்பா இறந்து பத்து வருடம் ஆகிறது. அம்மா வீட்டுவேலை செய்கிறார். திருவாழி நல்லபெருமாள் ஜவுளிக்கடையில் கணக்கு எழுதுகிறான். அவன் அப்பாவும் அங்கேதான் வேலைப் பார்த்தார்.
சாவித்ரி ரொம்ப அமைதி. பிகாம் முடித்துவிட்டு ஆடிட் ஆபிஸில் வேலை செய்கிறாள். சுலோச்சனா நேரெதிர். வாயாடி, தைரியசாலி. காலேஜ் படிக்கிறாள். விகல்பம் இல்லாமல் எல்லோருடனும் பேசுவாள். அழகாகவும் இருப்பாள்.
திருவாழி கொஞ்சம் காட்டுமிராண்டி. தங்கைகளை சிலநேரம் அடிக்கவும் செய்வான்.
வயசு பெண்கள் உள்ளதால், திருவாழி தன் நண்பர்களை அவன் வீட்டுக்கு அழைத்து செல்லமாட்டான். என்னைத் தவிர. என் மீது அவ்வளவு நம்பிக்கை. திருவாழி அம்மாவும் என்னிடம் நன்றாக பழகுவார்கள்.
சுலோச்சனாவுக்கு என்னை பிடிக்கும், எனக்கும்தான். அவளுக்கு காலேஜிலும் நிறைய ஆண் நண்பர்கள் உண்டு. என்னிடம் நன்றாக பழகுவாள். எல்லோருக்கும் காதல் வரும் பருவம்தான் எனக்கும். ஆனால் அவள் என்னை காதலிக்கிறாளா என்று தெரியாது. ஒருநாள் என்னிடம் ஜாடை மாடையாய் சொன்னாள்.
நான் இடத்தை காலி செய்து விட்டு வந்துவிட்டேன்.
நான் இடத்தை காலி செய்து விட்டு வந்துவிட்டேன்.
எனக்கு, ஆசையிருந்தாலும், திருவாழி என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை அதை தடுத்து விட்டது. இது எதுவும் திருவாழிக்கு தெரியாது. தெரியவும் கூடாது.
இது நடந்து ஒரு வருடம் ஒடி விட்டது. அதன் பிறகு திருவாழி வீட்டுக்கு போனால், நான் தனியாக இருக்கும் சந்தர்ப்பம் வராமல் பார்த்துக் கொண்டேன். ஆனால் சுலோச்சனா என்மீது வீசும் ஒரப்பார்வையை மட்டும் விடவில்லை.
தீபாவளிக்கு அடுத்த நாள் அதிகாலை, லேசாக மழை பெய்து கொண்டிருந்தது. என் வீட்டு கதவை யாரோ தட்டினார்கள். வெளியே திருவாழி குரல்தான் கேட்டது. எனக்கு பகீரென்றது. இவன் எதுக்கு இந்த நேரத்திலென்று. முகம் வாடியிருந்தது. ராத்திரி முழுவதும் தூங்காதது அவன் கண்களில் தெரிந்தது.
”என்னடே இந்த நேரத்ல”
பதில் உடனே சொல்லவில்லை. சிறிது இடைவெளிவிட்டு, “தங்கச்சிய காணோம், ராத்திரி வீட்டுக்கு வரல” என்றான். வேறு எதுவும் பேசவில்லை.
“வா, போலீஸ் ஸ்டேசன் போகலாம்”
“…….வேண்டாம், அவ அந்த மருந்து கட வச்சிருக்க, புறா கணேசன் மவன் கூடதான் ஒடி போயிருப்பா. நான் விசயம் தெரிஞ்சு ரெண்டு மூணுதடவ அடிச்சன், அவ கேட்கல, விட்டு தொல”.
எனக்கு துக்கம் தாங்கவில்லை. சுலோச்சனா இப்படி செய்துவிட்டாளே.
“சரி வா வீட்டுக்கு போகலாம்”
நான், சட்டையை போட்டு கொண்டு கிளம்பினேன். சாய்பு கடையில் ஒரு தம்மை பத்த வச்சான்.
முகத்தை கீழே தாழ்த்தி புகையை விட்டுகொண்டே எந்த முன்னுரையுமில்லாமல் சொன்னான், “ அப்பா செத்ததுக்கு பொறவு, ஒரு புது சட்ட வாங்க கூட மனசில்லாம, இதுகளுக்கு செய்தன், கண்டாரவோளி, இப்படி பண்ணிட்டு போய்ட்டு”
நான் எதுவும் பேசவில்லை. நடந்தோம்.
முக்கு திரும்பியதும் பார்த்தேன், திருவாழி வீடு, உறவினருக்காக காத்திருக்கும், பிணம் கிடத்திய வீடு போல், அதிகாலையில் அந்த வீடு மட்டும் விழித்திருந்தது.
வீட்டுக்குள் நுழைந்ததும், திருவாழியின் அம்மா, “மக்கலே, ஏதாவது தெரிஞ்சுதா”
“சும்மா போம்மா”
திருவாழி மாமா இருந்தார். யாரும் தூங்கவில்லை என்பது எல்லோர் கண்ணிலும் தெரிந்தது.
நான் முற்றத்தைப் பார்த்தேன். இங்கிருந்து எவ்வளவு பேசியிருக்கிறோம். மனசு கிடந்து அடித்தது.
”கொஞ்சம் நீத்தண்ணி தாம்மா” என்றான் திருவாழி.
”ஏட்டி, அண்ணனுக்கு, நீத்தண்ணி கொண்டா” என்றாள் அம்மா.
சுலோச்சனா நீத்தண்ணி கொண்டு வந்தாள்.
எனக்கு அவளை பார்த்ததும், இன்ப அதிர்ச்சி. என்னையறியாமல், நான் புன்னகைத்தேன். அந்த இடத்துக்கு அது அன்னியாமாய் பட்டது.
ஓ!! காணமல் போனது சாவித்ரி.
அவள் அப்படி பட்டவள் இல்லையென்பதால், எனக்கு யாரென்று திருவாழியிடம் கேட்கவே தோன்றவில்லை.
எனக்கு வயிற்றுக்குள் என்னவோ செய்தது.
சொம்பை கொடுத்து விட்டு அங்கேயே நின்றாள்.
திருவாழி சொம்பை திரும்ப கொடுத்து விட்டு, சுலோச்சனாவிடம், சொன்னான், “கழுத நீயாவது ஒழுங்காயிரு”
சுலோச்சனா என்னைப் பார்த்தாள். நான் குனிந்து கொண்டேன்
No comments:
Post a Comment