நான், சுடலை, சங்கர் மூவரும் நண்பர்கள். சுடலையின் அப்பா செட்டிகுளம் ஒர்க்ஷாப்பில் ஒரு மெக்கானிக். குடிகாரர்.சுடலைக்கு 4 அக்கா, ஒரு அண்ணன். சங்கர் அப்பா, வாத்தியார். பிள்ளையார் கோவில் டிரஸ்டி.
இருவரும் படிப்பில் அவ்வளவு இல்லை. அடாவடிகளில் தேர்ந்தவர்கள். தனியாக சினிமாவுக்கு போவது, “திருட்டு தம்” அடிப்பது எல்லாம் செய்வார்கள். பம்பரம்,கலச்சி (கோலிகுண்டு) எதுவானாலும் ஏரியா பசங்களை அதிர வைப்பார்கள்.
நான் தயிர்சாதம். அவர்களின் கலச்சிகளை என் பாக்கட்டில் போட்டுக்கொண்டு, அவர்கள் கேட்கும் போது கொடுப்பேன். அவர்களின் பம்பரம் தூரபோய் விழுந்தால் எடுத்து வருவேன். அவர்களோடேயே அலைந்து கொண்டிருப்பேன்.
ஒருமுறை சைக்கிளின் ‘வால் டியூப்பை’ கொடுத்தால், மூன்று ரூபாய் கிடைக்குமென்று, தெருதெருவாய் போய் வீட்டு வாசல்களில் நிற்கும் சைக்கிளில் வால் டியூப்பபை திருடி கொண்டிருந்தார்கள். நானும் கூட போனேன். அப்போது அந்த வழி வந்த எங்கள் ஸ்கூல் பியூன் பார்த்து துரத்த, அவர்கள் இருவரும் ஒடிவிட, நான் மாட்டிகொண்டேன்.
என் பனியனை கழற்றி கையைக் கட்டி, ஸ்கூல் வாசலில் நிற்க வைத்து விட்டார்கள். இதை கேள்விப்பட்டு வந்த என் சித்தப்பா, அந்த பியூனை அடிப் பின்னிவிட்டார். அவருக்கு என் மேல் பாசம் அதிகம், அதுவுமில்லாமல் நான் இப்படிபட்ட செயல்கள் செய்யமாட்டேன் என்று ஊருக்கே தெரியும். (அவ்வளவு தைரியசாலி).
அப்பா என்னை பின்னிவிட்டார். ஆனாலும் அவர்களின் நட்பை விட முடியவில்லை. ஒரு அடிமையின் மனபாவத்தோடேயே இருந்தேன். அது மட்டுமல்ல, எங்களின் எதிரி குரூப்பிற்கு திருவாழிதான் தலைவன். அவனை எனக்கு பிடிக்காது. அதனாலயே, இவர்களின் அண்டை எனக்கு தேவைப்பட்டது.
இப்ப விசயத்துக்கு வரேன். நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது, அவர்கள் இருவரும் எட்டாம் வகுப்பு. ஆண்டு தேர்வு முடிந்து ரிசல்ட் வந்தது. நான் பாஸ். இருவரும் பெயில். (ஏற்கனவே இருவரும் இன்னொரு வருடம் பெயில்). இருவர் வீட்டிலும் அடி,உதைக்கு கேட்கவே வேண்டாம்.
சாயங்காலம் வழக்கம்போல் அவர்களை சந்திக்க சென்றேன். கோவில் முகப்பில் இருந்தார்கள். நான் அருகில் சென்றேன். சங்கருக்குதான், அவமானம் தாங்க முடியவில்லை. பொறுக்க முடியாமல் சுடலையிடம் என்னை பார்த்து சொன்னான், “அடுத்த வருசம், இவங்கூடதான்ல நம்ம படிக்கனும்”. அதில் நான் ஏதோ தவறு செய்துவிட்டது போன்ற தொனி இருந்தது. எனக்கோ அதிர்ச்சி. நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். எனக்கோ நாளையிலிருந்து யாருடன் சுற்றுவதென்று தெரியவில்லை. நான் அநாதை ஆனது போன்ற உணர்வு இருந்தது.
அடுத்த நாள் காலை, எங்கள் குரூப் ராகவன் வந்து சொன்னான். சங்கரும் சுடலையும் மூட்டபூச்சி மருந்து குடிச்சுட்டு, கோபால் மாமா வீட்டு தோட்டத்துல கிடந்தாங்களாம். உயிர் இருக்காம், ஆஸ்பத்ரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்கன்னு.
எனக்கு அழுகையாக வந்தது. நான் என்ன தப்பு செய்தேன். என்கூட படிப்பது அவ்வளவு பெரிய அவமானமா?.
அப்புறம் தகவல் வந்தது. இருவரும் பிழைத்து விட்டார்கள். அதன் பிறகு, நான் அவர்களுடன் பேசுவதில்லை. திருவாழியுடன் நட்பானேன். அவன் அவ்வளவு மோசமில்லை.
இப்போது, சுடலை, செட்டிகுளம் ஜங்சனில் ஒரு பெரிய லாரி ஒர்க்ஷாப்க்கு ஒனர். சங்கர், ஒரு பெந்த்கோஸ்த் பெண்ணை காதலித்து, சர்ச்சில் பாதர் ஆகிவிட்டான்.
ஊருக்கு போனால் எப்போதாவது இவர்களை கடக்க நேரிடும். யாரோ போல் கடந்து சென்று விடுவோம்.
ஆனால் இன்று வரை புரியவில்லை, அந்த குழந்தைகால உளவியலை.
No comments:
Post a Comment