Monday, October 3, 2011

பிரமிளின் பன்முகங்கள்

prameel45pramil44
சுந்தர ராமசாமி காட்டும் பிரமிளின் பன்முகங்கள்
  • உணவைப் பற்றியோ, ஆடை பற்றியோ அவருக்குக் கவனமே கிடையாது. உயிர் வாழ உண்ண வேண்டியிருக்கிறது. அம்மணமாக இருந்தால் பார்ப்பவன் உதைப்பான். அதற்கு மேலாக எதுவுமில்லை. என் வீட்டு மொட்டை மாடியின் நடுவிலிருந்த ஒரு கூரையின் நிழல் பன்னிரண்டு மணி வரையிலும் பக்கவாட்டில் இருக்கும். அந்த நிழலுக்குமேல் ஒரு பலாமரத்தின் கிளைகளும் வீச்சாக இருக்கும். அந்த இடத்தில் வெறும் தரையில் படுத்துக்கொண்டிருப்பார். திடீரென்று எழுந்திருந்து வெளியேபோய் சுற்றிவிட்டு வருவார். எங்கு போவார் என்பது தெரியாது. திரும்பி வரும்போது முகத்தைப் பார்த்தால் நாலைந்து மைல்கள் சுற்றியிருப்பதுபோல் தோன்றும்.
  • ஒரு காசு வீணாக்கமாட்டார். செலவழிக்கவே யோசிப்பார். பணமும் கையில் மட்டாகத்தான் எப்போதும் இருக்கும்
  • திடீரென்று ஒரு நாள் பெட்டி படுக்கையுடன் சிவராமூ என் வீட்டுக்கு வந்தார். அலங்கோலமாக இருந்தார். என்ன என்று கேட்டேன். ‘பெரிய சிக்கல் ஓய்’ என்றார். அதைப்பற்றிப் பின்னால் பேசிக்கொள்ளலாம் என்றேன். சொன்னார். தெளிவாகவே சொல்லவில்லை. அவருடைய வாழ்க்கையில் நடந்த எந்த விஷயத்தைப்பற்றிக் கேட்டாலும் சொற்ப வார்த்தைகளில் மென்று துப்புவார்.
  • சிவராமூ யாராவது ஒருவரது வீட்டில் தங்கினார் என்றால் அந்த வீட்டிலிருப்பவர்களிடையே, கணவன் மனைவியிடையேகூட ஒரு பிரச்சினை நிச்சயம் உருவாகி விடும். பெரும்பான்மையான குடும்பங்களில் அப்படி நடந்திருக்கிறது. எங்கள் வீட்டில் அப்படியான பிரச்சினை வரவில்லை. ஆனால் அவர் கமலாவிடம் பேசும் போது என் மீது சந்தேகம் வரும்படியாக ஏதாவது பேசுவார். கிண்டல் மாதிரியும் இருக்கும். ஆனால் ஒருவித விஷ ஊசியை மறைத்துக் கொண்டிருப்பாகவும் தோன்றும். எங்கள் வீட்டில் அவரது முயற்சி ஏனோ வெற்றி பெறவில்லை. இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருந்தால் ஒருவேளை வெற்றி அடைந்திருந்தாலும் அடைந்திருக்கும்.
  • கடிதம் எழுதினாரென்றால் மிகக் கடுமையாக விமர்சித்துதான் எழுதுவார். வெங்கட் சாமிநாதன் விமர்சித்து எழுதினாலும் மிகவும் மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் அவர் சொல்லும் விமர்சனங்களில் ஒரு தர்க்கபூர்வமான நியாயம் இருக்கும். சிவராமூ எழுதுவது அப்படி இருக்காது. அதோடு சாமிநாதன் எழுதியதற்கு நாம் விளக்கம் சொன்னால் அவர் அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுவார். உறவை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் சிவராமூ விடம் அது சாத்தியமில்லை.
  • ஒரு நாள் எனக்கு ஒரு பெரிய பில் அனுப்பியிருந்தார். என்ன என்று பார்த்தால் எங்கள் குடும்பத்தில் இருந்த எல்லோருடைய பெயரையும் எண் கணித சாஸ்திரப்படி அவர் மாற்றிக் கொடுத்ததற்கான பில் அது. அவர் மாற்றிக் கொடுத்தது வாஸ்தவம்தான். அதற்கு பில் அனுப்பியிருந்தார். கமலாவுக்கு 900 ரூபாய். எனக்கு ஆயிரம். நான் அவளைவிட வயதில் மூத்தவன். உயரமாகவும் வேறு இருக்கிறேன். அதனால் எனக்கு நூறு ரூபாய் அதிகம். இப்படி வீட்டில் இருந்த எல்லோருக்கும் பெயரை மாற்றிய கணக்கில் ரூபாய் முப்பத்தைந்தாயிரம் நான் தரவேண்டும் என்று ஒரு பில் அனுப்பியிருந்தார்.அதோடு நிற்காமல் நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு கடிதம் எழுதினார். ராமசாமி எனக்கு முப்பத்தைந்தாயிரம் ரூபாய் தரவேண்டியிருக்கிறது. நான் ரொம்பவும் கஷ்டப்படக்கூடியவன் என்பது உங்களுக்குத் தெரியுமே. ராமசாமியிடம் வசதி இருக்கிறது. இந்நிலையில் எனக்குச் சேர வேண்டிய முப்பத்தைந்தாயிரத்தை நீங்கள்தான் கேட்டு வாங்கித்தர வேண்டும் என்று கடிதம் அனுப்பினார்.
  • அவர் என் வீட்டிலிருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு முழுவதுமாகப் பிரிந்து போனது என்பது ‘ஜே.ஜே : சிலகுறிப்புகள்’ எழுதுவதற்கு முன்பேதான் என்பது நன்கு நினைவிருக்கிறது. அதன் பின் அவரை நான் பார்க்கவேயில்லை. சென்னையிலோ வேறு எங்குமோ தற்செயலாகக்கூட அவரை நான் பார்க்க முடிந்திருக்கவில்லை.
 prameel47 SURApramizh
நினைவோடையின்  முழுவதும் படிக்க இங்கே செல்லவும்
புகைப்பட உதவி: ஹரன் பிரசன்னா, http://sundararamaswamy.com

No comments:

Post a Comment